கடந்த 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படை தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் காசாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் இந்தத் தாக்குதலில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும், உலக நாடுகள், இந்தத் தாக்குதலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து விமானங்கள் மூலம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அப்பகுதியில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தரை வழித் தாக்குதலும் நடத்தப் போவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இந்தச் சூழலில் உடனடியாக காசாவில் மனிதாபிமான போர்நிறுத்தம் அமல்படுத்த வேண்டும் என ஐ.நா.வின் பொதுச் சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
இந்தத் தீர்மானத்திற்கு 120 உறுப்பு நாடுகள் ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும், இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் வாக்களிக்காமலும் தவிர்த்தன. இதனையடுத்து இந்தத் தீர்மானம் பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக காசா போரை நிறுத்தக் கோரி ஐ.நா பொதுச் சபையில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது அதிர்ச்சியையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “காசா போர் நிறுத்தம் தொடர்பான வாக்கெடுப்பை நமது நாடு புறக்கணித்திருப்பது என்பது அதிர்ச்சியையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நமது நாடு, உண்மை மற்றும் அகிம்சை கொள்கைகளால் உருவானது. அந்தக் கொள்கைகளுக்காக நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் உயிரையும் தந்துள்ளனர்.
அந்தக் கொள்கைகள், நமது தேசத்தை வரையறுக்கும் அரசியலமைப்பின் அடிப்படையை உருவாக்குகின்றன. அவை, சர்வதேச சமூகத்தை வழிநடத்தும் இந்தியாவின் வலிமையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. ஒரு நிலைப்பாட்டை எடுக்க மறுத்து, மனிதாபிமானத்தை உடைத்து லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்து பொருட்கள், மின்சாரம் போன்றவை மறுக்கப்படுவதையும், ஆயிரக்கணக்கான பாலஸ்தீன ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருப்பது என்பது இந்தியா என்ற தேசத்திற்கு எதிரானது” என்று தெரிவித்துள்ளார்.