கர்நாடக மாநிலம் உலிகி கிராமத்தில் 25 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் அப்பகுதி மக்களிடம் யாசகம் பெற்று பிழைப்பை நடத்தி வருகிறார். இவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தை உள்ள நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில் தனது குழந்தைகளுடன் அப்பகுதி மக்களிடையே யாசகம் பெற்று, பின்பு அப்பகுதியில் உள்ள சாலையோரங்களில் தங்கியிருந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த பெண்ணின் குழந்தை ஒன்றை பணம் கொடுத்து ஒருவர் வாங்கியுள்ளார். இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியருக்கு தெரியவர, உடனடியாக விலைக்கு வாங்கியவரைச் சந்தித்து பேசி, குழந்தையை அவரிடமிருந்து மீட்டு கொப்பல் மாவட்ட குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.
இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் யாசகம் எடுக்கும் பெண்ணிற்கு மதுகுடிக்கும் பழக்கம் இருக்கிறது. அதனால் மது குடிக்க பணமில்லாததால் 4மாத குழந்தையை அந்த பெண் 100 ரூபாய்க்கு விற்பனை செய்ததது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.