இந்தியாவில் கரோனா பாதிப்பு 26 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 1500- க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,942 லிருந்து 26,496 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 779- லிருந்து 824ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து 5,804 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதற்கிடையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 3- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, "கரோனா ஒழிப்பில் மக்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. கரோனாவுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் வீரர்களைப் போலப் போராடுகிறார்கள். அரசின் ஒவ்வொரு துறைகளும் 24 மணி நேரமும் மக்களுக்கு உதவுவதற்காகச் செயல்பட்டு வருகிறது. கரோனா விவகாரத்தில் இந்தியா ஒற்றுமையாக இருக்கிறது. மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுகின்றன. கரோனாவுக்கு எதிராக மக்களால் நடத்தப்படும் போர் நிச்சயம் வெல்லும் என நம்புகிறேன். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களைத் தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனாவில் இருந்து உலகம் மீண்டுவிட்டது என்ற நல்ல செய்தியுடன் அடுத்தமுறை பேசுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.