மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் 4 வயது பள்ளி சிறுமிகள் 2 பேருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைக் கண்டித்து நேற்று (20.08.2024) பத்லாபூர் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அம்மாநில அமைச்சர் கிரிஷ் மகாஜன், பத்லாபூர் ரயில் நிலையத்தில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் போராட்டக்காரர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் ரயில் சேவையும் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே இந்த சம்பந்தப்பட்ட பள்ளியில் உள்ள பொருட்களையும் போராட்டக்காரர்கள் சூறையாடினர். அதே சமயம் குற்றத்தில் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளியை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகி இருந்தது. இத்தகைய பரபரப்பான சூழலில் தான் இந்த விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் நடந்த பள்ளி மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாகத் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அலுவலகத்தின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்த பத்லாபூர் காவல் நிலைய மூத்த காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலரை உடனடியாக சஸ்பெண்ட் செய்யுமாறு தானே காவல்துறை ஆணையருக்குத் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதே சமயம் பத்லாபூர் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற போலீசார் மீது கற்களை வீசி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி எம்.பி. எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், பீகாரைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவிலும் மகள்களுக்கு எதிரான வெட்கக்கேடான குற்றங்கள் நடைபெற்றுள்ளன. ஒரு சமூகமாக நாம் எங்கே போகிறோம் என்று சிந்திக்கத் தூண்டுகிறது?. பத்லாபூரில் அப்பாவி மகள்கள் இருவர் மீது இழைக்கப்பட்ட குற்றத்திற்குப் பிறகு நீதி கேட்டு பொதுமக்கள் வீதிக்கு வரும் வரை அவர்களுக்கு நீதி கிடைக்க முதல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இப்போது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்யக் கூட போராட்டம் நடத்த வேண்டுமா?. இத்தனைக்கும், பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்துக்குச் செல்வதற்குக் கூட சிரமப்படுவது ஏன்?. நீதியை வழங்குவதை விடக் குற்றங்களை மறைப்பதற்கே அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும். நலிந்த பிரிவைச் சேர்ந்த மக்களும்தான். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாதது பாதிக்கப்பட்டவர்களைக் காயப்படுத்துவது மட்டுமின்றி குற்றவாளிகளை தைரியப்படுத்துகிறது.
சமூகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அனைத்து அரசுகளும், பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். நீதி என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. எனவே அவர் காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் விருப்பத்தின் அடிப்படையில் இருக்க முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.