இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இரு அவைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் சார்பில் மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், இரு அவைகளிலும் உடனடியாக இதுகுறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் இரு அவைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் மதியம் இரு அவைகளும் கூடிய நிலையில், மணிப்பூர் பெண்களுக்கு எதிராக நடந்த சம்பவம் குறித்து உடனே இரு அவைகளிலும் விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் மீண்டும் தொடர்ந்து முழக்கம் எழுப்பப்பட்டது. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இதையடுத்து நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
கூட்டத்தொடரின் இரண்டாம் நாளும் இதே நிலைமை நீடித்ததால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்குப் பின்னர் மூன்றாவது நாளாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. அப்போது எதிர்க்கட்சிகள் சார்பில் மணிப்பூரில் நிகழ்ந்த கொடூரச் சம்பவம் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும், இந்தச் சம்பவம் குறித்துப் பிரதமர் மோடி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கு இரு அவைகளிலும் அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, இரு அவைகளும் முதலில் நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
அதன் பின்னர் நண்பகல் 12 மணிக்கு இரு அவைகளும் கூடின. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மதியம் 2 மணி வரையிலும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்துள்ளார்.