Skip to main content

“பிரதமர், பெண்களுக்கு நிரந்தர பணி வேண்டும் என முன்பே தெரிவித்தார்”- ராஜ்நாத் சிங்

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

இந்தியாவிலுள்ள விமானப் படை, கடற்படை ஆகியவற்றில் பெண்கள் குறுகிய காலம் மட்டுமே பணி அமர்த்தப்பட்டு வருகின்றனர். இதனை எதிர்த்து கடற்படை பெண் அதிகாரிகள் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த 2010ஆம் ஆண்டு விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், கடற்படையில் பெண்களை முழுமையான சேவையில் பணியமர்த்துங்கள் என்று உத்தரவிட்டது.
 

narendra modi

 

 

இந்த உத்தரவை எதிர்த்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தது. இது தொடர்பான விசாரணையின்போது, ராணுவத்தில் கமாண்டர் போன்ற பதவிகளுக்கு பெண்களை ஏன் தேர்வு செய்யக் கூடாது என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் அளித்த அறிக்கையில்,  “ஆண்களை ஒப்பிடும்போது, பெண்களின் உடல் வலிமை மிகவும் குறைவு. அதேபோல், மகப்பேறு காலங்களில் அவர்கள் நீண்ட விடுமுறை எடுக்க வேண்டியிருக்கும். குழந்தைகளைப் பராமரிப்பது, கணவர்களின் தேவைகளைக் கவனிப்பது உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் அவர்களுக்கு உள்ளன. இதனால், ராணுவத்தில் கமாண்டர்களாகப் பணிபுரிவது பெண்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும்.

இது ஒருபுறம் இருக்க, ராணுவத்தில் பணிபுரியும் ஆண்கள், உடல் வலிமையில் குன்றிய பெண் அதிகாரிகளின் உத்தரவுகளை ஏற்று நடப்பதும் கேள்விக்குறிதான். எனவே, இதுபோன்ற காரணங்களால் ராணுவக் கமாண்டர்களாக பெண்களை பணியமர்த்துவது அரசுக்குச் சவாலான விஷயம்” என்று தெரிவித்தது.

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹேமந்த் குப்தா அமர்வு இந்தவழக்கில் இன்று தீர்ப்பளித்தனர். அத்தீர்ப்பில்,  “பெண்களுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஏற்படும் பிரச்சினைகள், காரணிகள் எல்லாம் அவர்கள் ராணுவத்தில் உயர்ந்த பதவிகளைப் பெறுவதற்குத் தடையாக இருக்கும் என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தில் அதற்கு எந்தவிதமான இடமும் இல்லை. ராணுவத்தில் சமத்துவத்துடன் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்.

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. மத்திய அரசின் மனநிலையில் மாற்றம் வர வேண்டும். ராணுவத்தில் பெண்களுக்கும் உயர்ந்த அதிகாரிகள் அந்தஸ்து பதவிகள் வழங்க வேண்டும். பல்வேறு பெண் அதிகாரிகள் நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ளார்கள். சேனா விருதுகளைப் பெற்றுள்ளார்கள். ஐ.நா. அமைதிப் படையில் பணிபுரிந்துள்ளார்கள். ஆதலால், பெண்களின் உளவியல் காரணிகளைக் காரணமாக்கி பதவி மறுக்க முடியாது.

கடந்த காலத்தில் ராணுவத்தில் பெண் அதிகாரிகள் பல்வேறு உயர்ந்த பதவிகளை வகித்துள்ளார்கள். பெண்களை நடத்தும் பாங்கில் அரசின் மனநிலையில் மாற்றம் தேவை. ராணுவத்தில் ஆண்களும், பெண்களும் சமமாகப் பணியாற்றும்போது அவர்களுக்குள் பாகுபாடு பார்க்கக்கூடாது.

2010ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம், பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் உருவாக்க வேண்டும் என்று அளித்த தீர்ப்பை அமல்படுத்தாமல் மேல்முறையீடு செய்து 10 ஆண்டுகளை வீணடித்துள்ளது வேதனைக்குரியது. டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு ஏற்ப மத்திய அரசு நடக்க வேண்டும், அந்த உத்தரவுக்கு எந்தவிதமான தடையும் இல்லை.

ராணுவத்தில் ஆண் அதிகாரிகளுக்கு நிகராக, பெண் அதிகாரிகளுக்கும் தங்கள் ஓய்வு காலம் வரை பணியாற்றலாம் அதற்கு மத்திய அரசு அடுத்த 3 மாதங்களுக்குள் கொள்கை முடிவுகளை வகுக்க வேண்டும். ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு எந்த விதமான உயர்ந்த பதவிகளை வழங்குவதிலும் தடை ஏதும் இல்லை” என்று தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில், “பெண் அதிகாரிகள் ஆயுதப் படையில் நிரந்தரமாக பணியாற்றலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன். கடந்த 2018ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது, பெண்கள் படைகளை வழிநடத்திச் செல்லும் அளவிற்கு ஆயுதப் படையில் அவர்களுக்கு நிரந்தர பணியிடங்களை வழங்க வேண்டும் என்ற யோசனையை பிரதமர் மோடி தெரிவித்தார்” என்று பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்