உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் கடந்த 19/11/2022 அன்று காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி தொடங்கியது. தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்த பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்திருந்தார்.
உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா இசை நிகழ்ச்சியையும் நடத்தியிருந்தார்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்ட நிலையில், இன்று காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கான இறுதி நாள் என்பதால் நிறைவு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். அதேபோல் இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கு பெற்றுள்ளனர்.