பெங்களூரு விவசாய அறிவியல் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை 107-வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி கர்நாடகாவுக்கு வருகை தந்துள்ளார்.
மதியம் பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ஆளுநர் உள்பட பலர் வரவேற்றனர். பின்னர் துமகூருவில் உள்ள சித்தகங்கா மடத்திற்கு சென்று பிரதமர் மோடி வழிபட்டார். அதன்பின்னர் பேசிய மோடி, "இந்த புனிதமான நிலத்திலிருந்து 2020 ஆம் ஆண்டைத் தொடங்குகிறேன் என்பது எனது அதிர்ஷ்டம். ஸ்ரீ சித்தகங்க மடத்தின் புனிதம் நம் நாட்டு மக்களின் வாழ்க்கையை வளமாக்க விரும்புகிறேன். பாகிஸ்தான் மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நாடு. மத சிறுபான்மையினர் அங்கு துன்புறுத்தப்படுகிறார்கள்.
துன்புறுத்தப்பட்டவர்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் பாகிஸ்தானுக்கு எதிராக பேசவில்லை, அந்நாட்டிலிருந்து வந்த அகதிகளுக்கு எதிராக பேசுகிறார்கள். நீங்கள் கோஷங்களை எழுப்புவது என்றால் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் மீதான அட்டூழியங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்புங்கள். நீங்கள் போராட்டம் நடத்த வேண்டுமானால், கடந்த 70 ஆண்டுகளில் பாகிஸ்தான் நடத்திய அட்டூழியங்களுக்கு எதிராக குரல் எழுப்புங்கள்" என தெரிவித்தார்.