Skip to main content

பிபின் ராவத் மறைவுக்கு உலகநாடுகள் இரங்கல் - புகழாரம் சூட்டிய அமெரிக்கா!

Published on 09/12/2021 | Edited on 09/12/2021

 

bipin rawat

 

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று (08/12/2021) பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவியும், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய விமானப் படையினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

 

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் (வயது 63) மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

 

அதேபோல் பல்வேறு உலக நாடுகளும் பிபின் ராவத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றன. பாகிஸ்தான் இராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் இராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவும், ஜாயிண்ட் ஜீப்ஸ் ஆப் ஸ்டாப் கமிட்டியின் ( Joint Chiefs of Staff Committee) தலைவர் ஜெனரல் நதீம் ராசாவும் இரங்கல் தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.

 

அதேபோல் அமெரிக்க தூதரகம், இந்திய இராணுவத்தில் ஒரு வரலாற்று மாற்றத்திற்கு அவர் தலைமை தாங்கினார் என கூறியுள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர், ஜெனரல் ராவத்தை தனது நாட்டிற்கு சேவை செய்த ஒரு தலைத்துவமான தலைவர் என நினைவு கூறுவேன் என கூறியுள்ளார்.

 

அமெரிக்காவின்  ஜாயிண்ட் ஜீப்ஸ் ஆப் ஃஸ்டாப்ஸின் (Joint Chiefs of Staff) தலைவர் ஜெனரல் மார்க் மில்லி, "ஜெனரல் ராவத், இந்திய இராணுவத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். இந்தியா - அமெரிக்கா இராணுவங்களுக்கு இடையேயேயான உறவை வலுப்படுத்தினார்" என கூறியுள்ளார்.

 

ரஷ்ய தூதர் நிகோலாய் குடாஷேவ், "இருதரப்பு சிறப்பு மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகித்த மிக நெருங்கிய நண்பரை ரஷ்யா இழந்துவிட்டது" என கூறியுள்ளார். அதேபோல் இலங்கை, சீனா, பூட்டான், இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் பிபின் ராவத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்