மராட்டிய மாநிலம் மும்பையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த 3 கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தலைவராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இடையே கூட்டணி எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிவசேனா கூட்டணி தலைவராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்ட நிலையில் கவர்னரை சந்தித்து உரிமை கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தவ் தாக்கரே மராட்டிய முதல்-மந்திரியாக பதவியேற்கும் விழா டிசம்பர் 1ந் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்பின்பு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திடம் செய்தியாளர்கள், மராட்டிய முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடப்படுமா? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராவத், அனைவருக்கும் அழைப்பு விடுப்போம். அமித்ஷா ஜியையும் நாங்கள் அழைப்போம் என்று கூறினார்.