Skip to main content

தடுப்பூசி கொள்கையில் திடீர் மாற்றம் ஏன்? - நிதி ஆயோக் விளக்கம்!

Published on 08/06/2021 | Edited on 08/06/2021

 

dr vk paul

 

இந்தியப் பிரதமர் மோடி, நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, தடுப்பூசி கொள்கையில் சில முக்கிய மாற்றங்களை அறிவித்தார். இதனைத்தொடர்ந்து மத்திய அரசு தனது தடுப்பூசி கொள்கையில் அந்த மாற்றங்களைச் செய்து இன்று வெளியிட்டது. அப்போது, நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே பால், செய்தியாளர்களைச் சந்தித்து, கரோனா தடுப்பூசிகள் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.

 

கரோனா தடுப்பூசிகள் தொடர்பாகப் பேசிய வி.கே.பால், "தனியார்களுக்கு (மருத்துவமனைகளுக்கு) தடுப்பூசிகளின் விலை தடுப்பூசி உற்பத்தியாளர்களால் தீர்மானிக்கப்படும். தனியார்களின் தேவையை மாநிலங்கள் ஒருங்கிணைத்துச் செயலாற்றும். 25 கோடி டோஸ் கோவிஷீல்ட் மற்றும் 19 கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அரசு ஆர்டர் அளித்துள்ளது. மேலும், பயோலொஜிக்கல் ஈ நிறுவனத்திடமிருந்து அரசு 30 கோடி தடுப்பூசிகளை வாங்க ஆர்டர் அளித்துள்ளது. அவை செப்டம்பரிலிருந்து கிடைக்கும்" என்றார்.

 

பயோலொஜிக்கல் ஈ தடுப்பூசியின் விலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "நிறுவனம் தடுப்பூசியின் விலையை அறிவிக்கும் வரை நாம் காத்திருக்கவேண்டும். புதிய கொள்கையின் அடிப்படையில் நிறுவனத்துடன் நாங்கள் நடத்தும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அது முடிவாகும். ஏற்கனவே அந்நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட நிதியுதவி, மத்திய அரசு கொடுக்கப்போகும் விலையின் ஒரு பகுதியாக இருக்கும். பயோலொஜிக்கல் ஈ நிறுவன தடுப்பூசியின் இடைக்கால சோதனை தரவுகள் நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளன" எனத் தெரிவித்தார்.

 

அண்மையில் உச்சநீதிமன்றம், மத்திய அரசே தடுப்பூசிகளை வாங்கி மாநிலங்களுக்கு வழங்கவேண்டும் என அறிவுறுத்தியதோடு, மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 35,000 கோடியை வைத்து 18 முதல் 44 வயதானோருக்கு ஏன் தடுப்பூசியை இலவசமாக வழங்கமுடியாது எனவும் கேள்வியெழுப்பியிருந்தது.  உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால்தான் மத்திய அரசே மொத்தமாகத் தடுப்பூசிகளை வாங்கி மாநிலங்களுக்கு இலவசமாகத் தர முன்வந்துள்ளதா என கேள்வியெழுப்பட்டது.

 

இதற்கு பதிலளித்த வி.கே.பால், "உச்சநீதிமன்றத்தின் கவலையை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் மே 1 முதல் இந்த பரவலாக்கப்பட்ட மாதிரியைச் செயல்படுத்துவது குறித்து இந்திய அரசு மதிப்பீடு செய்து வந்தது. இதுபோன்ற முடிவுகள் பகுப்பாய்வு மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் எடுக்கப்படுகின்றன" எனத் தெரிவித்தார். 

 


 

சார்ந்த செய்திகள்