மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பனிஷ்தேவா பகுதியில் இன்று (17.06.2024) காலை 9 மணியளவில் சீல்டா - கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் சீல்டா - கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியது. இந்த ரயில் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும், 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது.
சரக்கு ரயில் மோதியதில் பயணிகள் ரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் முழுவதுமாக சீர்குலைந்துள்ளன. அதிலும் குறிப்பாக எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசிப் பெட்டி தூக்கி வீசப்பட்டது. இதனையடுத்து இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டார்ஜிலிங் செல்கிறார். விபத்து நடந்த இடத்தில், டார்ஜிலிங் எம்.பி., ராஜு பிஸ்டா நேரில் பார்வையிட்டார்.
இந்நிலையில் இந்த ரயில் விபத்து சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. உயிர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று விரும்புகிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அரசு உடனடியாக முழு இழப்பீடு வழங்க வேண்டும். நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் அனைத்து உதவிகளையும் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ள ரயில் விபத்துகள் மோடி அரசின் தவறான நிர்வாகத்தின் மற்றும் புறக்கணிப்பின் நேரடி விளைவாகும், இதனால் ஒவ்வொரு நாளும் பயணிகளின் உயிர் மற்றும் உடைமைகளில் இழப்பு ஏற்படுகிறது. பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில், இந்தப் பயங்கரமான அலட்சியத்தை நாங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்புவோம். இந்த விபத்துக்களுக்கு மோடி அரசாங்கத்தை பொறுப்பேற்கச் செய்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். விபத்து காட்சிகள் வேதனை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். இந்தத் துயர நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில், ரயில்வே அமைச்சகத்தின் தவறான நிர்வாகத்தில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக, மோடி அரசு ரயில்வே அமைச்சகத்தை எப்படி கேமராவால் இயக்கப்படும் சுயவிளம்பர மேடையாக மாற்றியுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவது நமது கடமையாகும். மேலும் இந்திய ரயில்வேயைக் கைவிட்டதற்கு மோடி அரசாங்கத்தை பொறுப்பேற்கச் செய்வோம்’ எனத் தெரிவித்துள்ளார்.