ராணுவத்தில் மேஜர், கேப்டன் போன்ற அதிகாரிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுபோன்ற அதிகாரிகளை நியமிப்பதை குறைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதிகாரிகளின் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு ஏற்கனவே பணிபுரிந்த அதிகாரிகளை மீண்டும் நியமிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என்று ஆங்கில பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில் ராணுவ அதிகாரிகளை நியமிப்பதை பற்றி அரசு திட்டமிடுவது தொடர்பான பத்திரிகை செய்தியை இணைத்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “அரசியல் கட்சிகளை உடைக்க மோடி அரசுக்கு எல்லா நேரமும் உள்ளது. ஆனால், ஆயுதப்படைகளில் முக்கியமான காலியிடங்களை நிரப்புவதற்கு நேரமில்லை. தேசியத்தை பற்றி தினந்தோறும் மார்தட்டுபவர்கள் நமது ஆயுதப்படைகளுக்கு துரோகம் இழைத்துள்ளனர். தற்போது, ஆயுதப்படை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன.
அக்னிபாத் திட்டம் என்பது மோடி அரசிடம் நமது ராணுவ வீரர்களுக்கு நிதி இல்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது போன்ற ஒரு திட்டமாகும். ‘ஒரே பதவி ஒரே பென்சன்’ நடைமுறைப்படுத்தலில் பாதுகாப்பு படையினருக்கு மோடி அரசு துரோகம் இழைத்துள்ளது. மேலும், ‘ஒரே பதவி ஒரே பென்சன்-2’ இல் பெரிய அளவிலான முரண்பாடுகளைத் தூண்டுவதன் மூலம் நமது துணிச்சலான ஜவான்களிடையே பிளவை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மோடி அரசுக்கும் பாஜகவுக்கும் தேசியப் பாதுகாப்பு என்பது தேசிய முன்னுரிமை அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று தெரிவித்தார்.