பிரதமர் மோடியுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற மாநில முதலமைச்சர்கள், ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் மோடி இன்று முதல்வர்கள் உடனான கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாநில முதலமைச்சர்கள் ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்க வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், கரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் தொழில்களை தொடங்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பேசிய ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஊரடங்கை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்வு கொடுக்கலாமா என்பது பற்றி மே 3க்கு பின் அறிவிக்கப்படும் என பிரதமர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.