மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் மூன்று கட்ட தேர்தல் ஏற்கனவே முடிந்த நிலையில், அனைத்து கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இன்று காலை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வேட்புமனுவில் அவர் தாக்கல் செய்த சொத்து மதிப்பு கணக்கு தற்போது வெளியாகியுள்ளது. வேட்புமனு தாக்கலில் அவர் கொடுத்துள்ள தகவலின்படி, அவரது கையிருப்பில் ரூ. 38,750 ரொக்கமாக உள்ளது எனவும், அவரது பெயரில் சொந்தமாக காரோ, இரு சக்கர வாகனமோ இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ரூ. 1.41 கோடி மதிப்பில் அசையும் சொத்தும், ரூ.1.10 கோடி மதிப்புள்ள அசையா சொத்தும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.