கரோனா பாதிப்பு தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1.9 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர், 47,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் 1998 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கரோனா பாதிப்பு தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது முதல்வர்கள் மத்தியில் பேசிய அவர், "கரோனா பரிசோதனை, தொற்று உள்ளவர்களைக் கண்டறிதல், தனிமைப்படுத்துதல், மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தல் ஆகியவை அடுத்த சில வாரங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, எனவே மாநில அரசுகள் அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கரோனா பரவாமல் தடுப்பதற்கு இந்த நடவடிக்கைகள் மிகவும் அவசியமானவை. அதுபோல, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பைக் கவனித்துக் கொள்வதும் அவசியம்" என அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் பழனிசாமியும் காணொளி வாயிலாக இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றார்.