சமீபத்தில் மத்தியப்பிரதேச அரசால் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்ட கம்ப்யூட்டர் பாபா, அரசு விருந்தினர் மாளிகையில் யாகம் நடத்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பாயும் நர்மதா நதியின் பாதுகாப்பு குறித்து பிரச்சாரம் செய்ய பாபா நர்மதானந்தா, பாபா ஹரிஹரானந்தா, கம்ப்யூட்டர் பாபா, பையூ மகாராஜ் மற்றும் பண்டிட் யோகேந்திர மகந்த் உள்ளிட்ட சாமியார்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. பிறகு, கடந்த மார்ச் 31ஆம் தேதி இந்த ஐந்து பேருக்கும் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அந்தஸ்து, வருமானம் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மத்தியப்பிரதேச அரசு மேற்கொண்டது.
இந்நிலையில், கம்ப்யூட்டர் பாபா இன்று காலை அரசு விருந்தினர் மாளிகையில் தினசரி பூஜையை மேற்கொண்டுள்ளார். தலையில் புகை கக்கும் தீச்சட்டி, முன்னால் ஓமகுண்டம், தீர்த்த பாத்திரம் என இருக்க, தனது ஸ்மார்ட்போனின் மூலம் கம்ப்யூட்டர் பாபா பேசிக்கொண்டிருப்பது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, நர்மதா நதி தொடர்பான ஊழல், மணல் திருட்டைக் கண்டித்து ரத யாத்திரை நடத்த இருப்பதாக அறிவித்த கம்ப்யூட்டர் பாபா, பின்னர் அதிலிருந்து பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.