மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதுபோல தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளும் அனைத்து கட்சிகளாலும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று ஏ.பி.பி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மோடி, அதில் பேசுகையில், பாஜக மீது இஸ்லாமியர்கள் நம்பிக்கை வைக்காதது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில், "இஸ்லாமியர்களுக்காக நான் எதுவும் செய்யவில்லை. அதேபோல் இந்துக்களுக்காகவும் நான் எதுவும் செய்யவில்லை. இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியர்களாக இருந்தாலும், யாராக இருந்தாலும் அனைவருக்கும் வீடுகள் கட்டி தருவோம், அனைவருக்கும் மின்சாரம் வழங்குவோம். என்னுடைய அரசில் மதத்திற்கு எப்போதும் இடம் கிடையாது. சிலர் வெறும் வாக்குகளுக்காகவே இஸ்லாமியர்களின் பாதுகாப்பு குறித்து பேசுகின்றனர்" என கூறினார்.