புதுச்சேரியிலும் பிற மாநிலங்களைப்போல கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஊட்டசத்துப் பொருட்களுடன் கூடிய பரிசுப் பெட்டகம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கர்ப்பிணிகளுக்குப் பேறுகால உதவிப் பொருட்கள், குழந்தை பராமரிப்பு பொருட்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் அனுப்பிய கோப்புக்குத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் ஒப்புதல் அளித்தார்.
இந்தத் திட்டத்தின்படி அங்கன்வாடியில் பதிவு செய்துள்ள கர்ப்பிணிகளுக்கு சத்துமாவு, பால், நெய், புரதச்சத்து, பிஸ்கட் உள்ளிட்ட ரூ. 4000 மதிப்பிலான பேறுகால பொருட்களும், குழந்தைகளுக்கான உடை, துண்டு, குளியல் பொருட்கள் உள்ளிட்ட ரூபாய் ஆயிரம் மதிப்பிலான குழந்தை பராமரிப்பு பொருட்களும் வழங்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்தால் அரசுக்கு மாதந்தோறும் ரூ. 35 லட்சம் செலவாகும். அதன்படி இந்த மாதம் (ஜூலை) மற்றும் வருகிற ஆகஸ்டு மாதங்களுக்கான செலவு தொகையான ரூபாய் 70 லட்சத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ளதைப்போல புதுச்சேரியிலும் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் அடங்கிய பரிசுப் பெட்டகம் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கியுள்ளது பாராட்டத்தக்கது. இந்தத் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் பயன்பெறுவார்கள். கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் அந்தந்த பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்து இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டும்" என்றார்.