இராணுவ தயார்நிலை, மேக் இன் இந்தியாவுக்கு முக்கியத்துவம் - நிர்மலா சீத்தாராமன்
நேற்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீத்தாராமன் விசேஷ பூஜைகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்றார். இந்த நிகழ்வில் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி கலந்துகொண்டார். அப்போது இராணுவ ஆயத்த நிலை, இராணுவப் பிரிவில் இருக்கும் நீண்டகால பிரச்சனைகள், மேக் இன் இந்தியா மற்றும் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நல்வாழ்வு உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பேசிய அவர், ‘இராணுவப் படைகளின் தயார்நிலைக்கு எப்போதும் முக்கியத்துவம் அளிப்பேன். அதற்காக இராணுவ படைகளுக்கு தரமான உபகரணங்களை வழங்குவதன் மூலம், அவர்களது கடமையை இன்னும் சிறப்பாக செய்ய வழிவகை செய்வேன். மேலும், நீண்டகாலமாக இராணுவப்பிரிவில் நிலவி வரும் பிரச்சனைகளை பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின் மூலம் களைய முயற்சி செய்வேன்’ என தெரிவித்தார்.
மேக் இன் இந்தியா - இராணுவப் பிரிவுகளின் அனைத்து உபகரணங்களையும் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யவேண்டும். மேக் இன் இந்தியா மூலம் தயாரிக்கும் உபகரணங்களை சர்வதேச சந்தைகளுக்கு அனுப்புவதன் மூலம், நிதியையும் மேம்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், பாதுகாப்பு அமைச்சரின் முன்னாள் இராணுவவீரருக்கான நிதியில் இருந்து, ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கு உதவிசெய்ய வழிவகை செய்யப்படும் என தெரித்துள்ளார்.
இதையடுத்து, இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு சென்று, மத்திய ஆயுதம் தாங்கிய காவல்பிரிவினருக்கு பல்வேறு விதமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருந்தார்.
- ச.ப.மதிவாணன்