தீவிரவாதிகளை ஸ்தம்பிக்க வைத்துள்ள பணமதிப்பு இழப்பு நடவடிக்கை!: அருண் ஜேட்லி பெருமிதம்
பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் தீவிரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மும்பையில் நேற்று நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரின் பங்களிப்புகளால் தான், கல்வீச்சு தாக்குதல்களும், கிளர்ச்சியாளர்களின் போராட்டங்களும் குறைந்துள்ளன. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின் மூலம் தீவிரவாதிகள், மாவோயிஸ்டுகளுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நிதி விநியோகம் செய்ய முடியாத நிலையை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. எல்லைப் பாதுகாப்பில் இந்த நடவடிக்கையின் நல்ல விளைவுகள் வெளிப்படையாக தெரிகின்றன.
முந்தைய காங்கிரஸ் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தாமல், தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது? முன்னர், 1,000-க்கும் மேற்பட்டோர் காஷ்மீர் வீதிகளில் இறங்கி பாதுகாப்புப் படையினரின் மீது கல்வீசி தாக்குதல்களில் ஈடுபட்டனர். தற்போது 25 பேர் கூட போராட்டத்தில் ஒன்றிணைய தயங்குகின்றனர்.
புதிய இந்தியாவைக் கட்டமைக்கும் நோக்கம் மட்டுமே நம் அத்தியாவசிய இலக்காக இருக்க வேண்டும். அரசு நிதி பாதுகாப்பு, கிராமப்புற மற்றும் உட்கட்டமைப்புத் துறைகளின் மேம்பாட்டிற்காக பயன்படுத்தப் படவேண்டும். அரசுத்துறை நிறுவனங்களை மேம்படுத்த வேண்டும்; கோரக்பூரைப் போல ஒரு சம்பவம் நாட்டில் மீண்டும் ஒருமுறை நிகழாமல் இருப்பதை நாம் உறுதி செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.
- ச.ப.மதிவாணன்