மிக்ஜாம் புயல் காரணமாக மூன்றாவது நாளாக பெய்த மழைநீர் இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அசோக் நகர், அரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் ஆந்திர மக்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'மிக்ஜாம் சூறாவளியால், குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். இந்தப் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பேரிடர் மீட்புப்படையினர் அயராது உழைத்து வருகின்றனர். நிலைமை முழுமையாக சீராகும் வரை தங்கள் பணி தொடரும்' என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இடைக்கால நிவாரணமாக 5060 கோடி ரூபாய் நிதி கேட்டு பிரதமர் கடித்தும் எழுதியுள்ளதும், 'புயல் பாதிப்புகளில் இருந்து இன்னும் சென்னை மீளாத நிலையில், ஒன்றிய அரசின் உயர்கல்வித்துறை நடத்தும் யூஜிசி - நெட் தேர்வுகள் பல மையங்களில் நடக்கிறது. தேர்வு தேதியை மாற்றி சென்னை மாணவர்களுக்கு நியாயம் வழங்குங்கள்' என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடசன் வலியுறுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.