ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அரசால் நவீன தரத்தில் மேம்படுத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு ஆய்வகங்களில் ஜூலை 6 மற்றும் 12ம் தேதிகளில் தயாரித்த நான்கு லட்டு நெய் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் அடிப்படையில், லட்டுக்களை தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது உண்மைதான் எனத் திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ் தெரிவித்திருந்தார்.
திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்ந்து பேசுபொருளாகி வரும் நிலையில், மும்பையில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் வழங்கப்படும் லட்டு பாக்கெட்டில் எலிக்குட்டிகள் இருப்பதாக, வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்த நிலையில் இது குறித்துப் பேசிய கோவில் அறக்கட்டளை தலைவரும், சிவசேனா எம்.எல்.ஏ. வுமான சதாசர்வன்கர், “இந்த கோவிலில் லட்சக்கணக்கான லட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கோவிலில் லட்டு வழங்கப்படும் இடம் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், வீடியோவில் காட்டப்படும் இடம் அசுத்தமாக உள்ளது. அந்த வீடியோ கோவிலில் எடுக்கப்பட்டது அல்ல; வேறு எங்கேயோ எடுக்கப்பட்டு கோவில் பெயரைப் பயன்படுத்தியுள்ளனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும்” என விளக்கமளித்துள்ளார்.