




டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் சந்தித்துப் பேசினார். இதில், அரசியல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல் கூறுகின்றன.
அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியை மேகாலயா மாநில முதல்வர் கான்ராட் சங்மா சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்து முதல்வர் கான்ராட் சங்மா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மத்திய வரி வருவாய்ப் பங்கிலிருந்து ரூபாய் 5,105 கோடியும், 2021- 2022 ஆம் நிதியாண்டிற்கான இழப்பீடாக ரூபாய் 1,279 கோடியும் ஒதுக்கிய பிரதமருக்கு நன்றி. காலநிலை மாற்றத்தை பழைய நிலைக்குக் கொண்டு செல்லும் வகையில் மேகாலயா மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட முன் முயற்சிகள் குறித்தும், அனைத்து வடகிழக்கு மாநிலங்களையும் உள்ளடக்கிய காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை வள மேலாண்மை தொடர்பான சர்வதேச மாநாட்டை நடத்துவது குறித்தும்" பிரதமருடன் ஆலோசித்ததாகத் தெரிவித்துள்ளார்.