கல்வி, வேலை வாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை வழங்காமல் துரோகம் இழைப்பதாகக் கூறி புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவபொம்மை எரிக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 50- க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பத்தாயிரம் மருத்துவ இடங்களை தட்டிப்பறிக்கும் வகையில் கல்வி, வேலை வாய்ப்பில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் குழு அறிக்கையை மத்திய பா.ஜ.க அரசு மூன்று ஆண்டுகளாக முடக்கி வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைக் கண்டித்தும், பறிக்கப்பட்ட பத்தாயிரம் மருத்துவ இடங்களை மண்டல் குழு பரிந்துரை படி 27 சதவீத இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வலியுறுத்தியும் புதுச்சேரி காமராஜர் சிலை அருகே தந்தை பெரியார் திராவிடக்கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவர்கள், திடீரென பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50- க்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.