உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 19 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 300-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 10,000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
![jhk](http://image.nakkheeran.in/cdn/farfuture/c1vR3Vqjpln033OXGfBj6pQ7dd2VxoP6U291nqY_2aw/1586883122/sites/default/files/inline-images/jkl%27_0.jpg)
இந்நிலையில் இந்த ஊரடங்கை எப்படி கழிப்பது என்பது தொடர்பாக பலரும் தங்களுடைய அனுபவங்களை வீடியோக்களாக இணையத்தில் பதிவிடுகிறார்கள், கேரளாவை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் கரோனா விழிப்புணர்வுக்காக வீட்டிற்குள்ளாகவே 42 கிலோமீட்டர் மராத்தான் ஓட்டம் ஓடிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்தவர் சுரேஷ், வயது 50. பல்வேறு மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர், கரோனா விழிப்புணர்வுக்காக மராத்தானில் கலந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்து தன்னுடைய வீட்டிற்குள்ளாகவே ஓடியுள்ளார். வீட்டின் படுக்கை அறையில் இருந்து சாப்பிடும் அறைக்கு மாறி மாறி சுமார் 42 கிலோ மீட்டர் தூரம் தொடர்ச்சியாக ஓடியுள்ளார். காலையில் ஆரம்பித்த அவரின் ஓட்டம் மதியம் 2.30 மணிக்கு நிறைவடைந்துள்ளது. அவருடைய மனைவி, குழந்தைகள் கைத்தட்டி அவரை உற்சாகப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.