இன்று பணி ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வருக்கு சக நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கேரள உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக செயல்பட்டு, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பேற்றவர் ஜஸ்டி செல்லமேஸ்வர். கடந்த ஏழு ஆண்டுகளாக உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அவருக்கு வரும் ஜூன் 22ஆம் தேதியோடு பணிக்காலம் நிறைவடைகிறது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட உள்ள நிலையில், அவர் முன்கூட்டியே பணிநிறைவு பெறுகிறார்.
உச்சநீதிமன்ற மரபின்படி பணி ஓய்வு பெறும் நீதிபதிகள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இடம்பெறுவார். அதன்படி, உச்சநீதிமன்றத்தில் அறை எண் 1ல் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் அமர்வில் நீதிபதி செல்லமேஸ்வர் 15 நிமிடங்கள் அமர்ந்திருந்தார். அந்த அமர்வில் நீதிபதி சந்திரசூட்டும் இடம்பெற்றிருந்தார்.
அப்போது நீதிபதி செல்லமேஸ்வருக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். அவரது ஒப்பற்ற பணிகளுக்கு பாராட்டு தெரிவிப்பதாகக் கூறிய வழக்கறிஞர் ராஜீவ் தத், ஜனநாயகத்தின் கொள்கைகளை உறுதிப்படுத்தியமைக்காக நன்றி தெரிவித்தார். அதேபோல், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ‘பார் கவுன்சில் உங்களை என்றும் நினைவில் கொள்ளும். ஜனநாயகத்தை நிலைநாட்ட பாடுபட்டதற்கு நன்றி’ என வாழ்த்தினார். ஜுனியர் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பலருடன் அன்புடன் பழகும் செல்லமேஸ்வருக்கு அனைவரும் நன்றி தெரிவித்தனர்.