காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்த திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து, காஷ்மீர் மாநில அரசு நேற்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அமர்நாத் யாத்திரை முடித்தவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உடனடியாக சொந்த ஊர்களுக்கு திரும்புமாறு அறிவுறுத்தியது. இதனால் காஷ்மீர் மாநிலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காஷ்மீர் மாநிலத்தில் அதிக அளவில் ராணுவ படைகள் குவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் அறிவிப்பால் காஷ்மீர் மாநிலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நாட்டு மக்களின் பார்வை காஷ்மீர் மாநிலம் பக்கம் திரும்பியுள்ளது என்றே கூறலாம்.
மத்திய அரசின் அறிவிப்பு தொடர்பாக பி.டி.பி கட்சி தலைவரும், ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி நேற்று இரவு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்புக்கு பிறகு ஆளுநர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் அரசியல் கட்சித்தலைவர்கள் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், பொறுமை காக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளது. எனவே, இவை முழுக்க முழுக்க பாதுகாப்பு நடைமுறையே ஆகும் என ஆளுநர் கூறியதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எந்த வித அவசர முடிவையும் எடுக்க வேண்டாம் என்று என்று வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் அறிவிப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் நிலவி வரும் பதற்றத்தால் ஏர் இந்தியா நிறுவனம் தனது விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.