வணக்கம் நல்லா இருக்கீங்களா? என தூத்துக்குடியில் வசிக்கும் பொன் மாரியப்பனிடம் தமிழில் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.
'மன் கி பாத்' நிகழ்ச்சியில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "நாட்டு மக்கள் அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகள் இந்தாண்டு மிகவும் எளிமையாக கொண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பண்டிகை கொண்டாட்டங்கள் வைரஸ் பரவல் காரணமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா முன்களப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பண்டிகைகள் கொண்டாடப்பட வேண்டும்.
பண்டிகை காலத்தில் பொருட்கள் வாங்கும்போது உள்ளூர் பொருட்களை அதிகளவில் வாங்க வேண்டும். வரிசையாக பண்டிகைகள் வரவுள்ளதால் தனிமனித இடைவெளியுடன் பண்டிகைகளைக் கொண்டாடுங்கள். காதி விற்பனை நிலையத்தில் விற்கப்படும் முகக்கவசங்களை மக்கள் அதிகம் வாங்குவது மகிழ்ச்சியளிக்கிறது. தூத்துக்குடியில் முடிதிருத்தும் நிலையம் நடத்தும் பொன் மாரியப்பன் அங்கே ஒரு நூலகத்தை நிறுவியுள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கிடையே பொன் மாரியப்பனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வணக்கம் நல்லா இருக்கீங்களா? நூலகம் நடத்தும் யோசனை உங்களுக்கு எப்படி தோன்றியது? உங்களுக்கு என்ன புத்தகம் பிடிக்கும்? என்று கேட்டார்.
நாடு முழுவதும் பல வழிபாட்டு தலங்களை நிறுவி அவற்றை மேன்மையடையச் செய்தவர் சங்கராச்சாரியார் என்று புகழாரம் சூட்டினார். தனது பக்தி மற்றும் வழிபாடு மூலம் நாட்டை ஒன்றுப்படுத்தியவர் சங்கராச்சாரியார். புதிய வேளாண் சட்டங்கள் மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பலனடைகின்றனர். பல தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கின்றனர். மக்காச்சோள விவசாயிகளுக்கு தங்களுடைய விலையைத் தவிர போனஸ் தொகையும் கிடைத்துள்ளது. விவசாயிகள் தொழில்நுட்பம் மூலம் புதிய வியாபார வாய்ப்புகளை உருவாக்கலாம்." இவ்வாறு பிரதமர் பேசினார்.
பொன் மாரியப்பனிடம் பேசும்போது தமிழில் ஒரு சில வார்த்தைகளை பேசி பிரதமர் அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.