Skip to main content

ஓயாத கலவரம்; துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் காயம்

Published on 20/06/2023 | Edited on 20/06/2023

 

manipur tribal people incident indian army man issue
கோப்பு படம்

 

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக பிரேன் சிங் இருந்து வருகிறார். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களை பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைத்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு மற்ற பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

கடந்த மே மாதம் 3 ஆம் தேதி இதற்காக பழங்குடியினர் மாணவர் அமைப்பு நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டு மணிப்பூரில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. மேலும் இந்த கலவரத்தில் 98 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 4 நாள் பயணமாகக் கடந்த மே மாதம் 29 ஆம் தேதி மணிப்பூருக்குச் சென்று பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார். இருப்பினும் அங்கு தொடர்ந்து கலவரம் மற்றும் பதற்றமான சூழல் நிலவுகிறது. மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய அரசு மௌனம் காப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.

 

இந்நிலையில் இம்பால் மேற்கு மாவட்டத்தில் கண்டோ சபல் என்ற கிராமம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு யாரும் எதிர்பாராத விதமாக மர்ம நபர்கள் சிலர் ராணுவ வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் செய்வதறியாது திகைத்த ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூட்டில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கினர். இருப்பினும், இந்த துப்பாக்கிச் சூட்டில் அங்கு இருந்த ராணுவ வீரர் ஒருவருக்கு இடது காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

இதையடுத்து அந்த பகுதியில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிங்மாங் என்ற பகுதியில் மர்ம நபர்கள் 3 வீடுகளுக்கு தீ வைத்தனர். இதனைக் கண்டு அங்கு பாதுகாப்புப் பணியில்  இருந்த ராணுவ வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர். இது போன்ற தொடர் சம்பவங்களால் மணிப்பூரில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்