இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து மைத்தேயி சமூகத்தை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் சுராசந்த்பூரில் பழங்குடியின மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர். அப்போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததில் அது கலவரமாக மாறியது. இதனால் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்த கலவரத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூன் 22 ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசுயா உய்கே, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்திருந்தார். அண்மையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் மாநிலம் இம்பாலுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து இருந்தார்.
இதனிடையே மணிப்பூர் தலைநகர் இம்பாலில் கடந்த 29 ஆம் தேதி கலவரம் ஏற்பட்டது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மணிப்பூரில் நேற்று முந்தினம் மீண்டும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் போலீஸ் கமாண்டோ, சிறுவன் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் மத்திய இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன்சிங் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மணிப்பூர் கலவரம் குறித்து கருத்து தெரிவிக்கையில், “மணிப்பூர் வன்முறைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம். தொடக்கத்தில் இருந்து 2017ஆம் ஆண்டு வரை மணிப்பூர் மாநிலத்தை காங்கிரஸ் கட்சியே ஆட்சி செய்தது. காங்கிரஸ் ஆட்சியின் போது செய்த தவறுகளே மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் நடக்க காரணம்” என தெரிவித்துள்ளார்.