Skip to main content

"நியாயமற்ற தாக்குதல்களால் திகைப்படைய வேண்டாம்!" - அமர்த்தியா சென்னிற்கு மம்தா கடிதம்!

Published on 26/12/2020 | Edited on 26/12/2020

 

mamta banerjee

 

மேற்கு வங்க மாநிலத்தில், சாந்திநிகேதனில் அமைந்துள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகம், புகழ்பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரால் உருவாக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் தங்களுக்குச் சொந்தமான இடங்களைப் பலர் ஆக்கிரமித்துவிட்டதாகக் கூறி, மேற்கு வங்காள அரசுக்குக் கடிதம் எழுதியதாகவும், அதில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னின் பெயர் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

 

இந்தநிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அமர்த்தியா சென்னிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தன்னை தங்கையாக நினைத்துக்கொள்ளும்படி அமர்த்தியா சென்னிடம் கூறியுள்ளார்.

 

மேலும், அந்த கடிதத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்த எனது ஆச்சரியத்தையும் வேதனையையும் வெளிப்படுத்தவே இந்த கடிதத்தை எழுதுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். அமர்த்தியா சென்னின் தாத்தா அங்கு குடியேறி இருந்ததையும், அமர்த்தியா சென்னின் தந்தை அங்கு புகழ்பெற்ற வீடு ஒன்றை வைத்திருந்ததையும் குறிப்பிட்டு, சாந்தி நிகேதனின் கலாச்சாரத்தில் நெய்யப்பட்ட குடும்பம் உங்களுடையது எனக் குறிப்பிட்டுள்ள மம்தா, விஸ்வ பாரதியிலுள்ள சில புதிய ஆக்கிரமிப்பாளர்கள் உங்கள் குடும்ப சொத்துகள் குறித்து ஆச்சரியமான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எழுப்பத் தொடங்கியுள்ளனர். இது எனக்கு வேதனை அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

 

மேலும், மம்தா பானர்ஜி, இந்த நாட்டில் பெரும்பான்மையினரின் மதவெறிக்கு எதிரான உங்கள் போர்களில், உண்மைக்கு எதிரான சக்திகளின் எதிரியாக உங்களை மாற்றிய போர்களில் உங்களுக்கு எனது ஆதரவைத் தெரிவிக்க விரும்புகிறேன். சகிப்புத்தன்மை மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான உங்கள் நியாயமான போரில் என்னை உங்கள் சகோதரி மற்றும் நண்பராக எண்ணுங்கள். இந்தப் பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் நியாயமற்ற தாக்குதல்களால் நாம் திகைப்படைய வேண்டாம். நாம் மீண்டுவருவோம் எனக் கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்