மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவை நிதியை மத்திய அரசு மேற்கு வங்கத்துக்கு நிறுத்தி வைத்திருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர். இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இது குறித்து சமீபத்தில் பேசினார்.
ஆனால், அவர் வைத்திருந்த கோரிக்கை மீது எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மத்திய அரசு மேற்கு வங்கத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை நிதியை பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் தர்ணாவில் ஈடுபடுவேன் என்று மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இது தொடர்பாக நேற்று (01-02-24) அவர் கூறியதாவது, “மத்திய அரசுக்கு பிப்ரவரி 1 வரை (நேற்று) காலக்கெடு விதித்திருந்தேன். இன்றைக்குள் நிலுவைத் தொகையை விடுவிக்காவிடில் இன்றிலிருந்து (02-02-24) தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன். அவர்கள் நிலுவைத் தொகையை விடுவிக்கவில்லை என்றால், அதை எப்படி பெற வேண்டும் என்று எனக்கு தெரியும். இந்த தர்ணா போராட்டத்தில் அனைத்து கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று கூறினார்.
இந்த நிலையில், கொல்கத்தா ரெட் ரோட்டில் மைதான பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தர்ணாவை முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (02-02-24) தொடங்கியுள்ளார். இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்த தர்ணா போராட்டம் தொடர்ந்து 48 மணி நேரம் வரை நடக்கும் என்று கூறப்படுகிறது.