நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகள் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றன. அதில் எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற கூட்டணியை உருவாக்கி ஆதரவைத் திரட்டி வருகின்றனர். இதற்கிடையே, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு எனப் பல்வேறு குழுக்களை அரசியல் கட்சிகள் நியமித்து தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன. மேலும், பல மாநிலங்களில் நடக்க இருக்கும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கான தேதியை காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.
இந்த நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாநில அளவிலான கட்சி நிர்வாகிகள் கூட்டம் நேற்று (29-01-24) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், “ இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி மீண்டும் வென்றுவிட்டால் நாட்டில் சர்வாதிகாரம் மட்டும் தான் இருக்கும். ரஷ்யாவை ஆட்சி செய்த விளாடிமிர் புதின் போன்று தான் இந்தியாவை பா.ஜ.க ஆட்சி செய்யும். ஜனநாயகம் இருக்காது. தேர்தலும் இருக்காது. இந்தாண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலே நாட்டு மக்கள் வாக்களிப்பதற்கான கடைசி வாய்ப்பாக இருக்கும். இதன்பின் வாக்களிக்க தேர்தல் இருக்காது.
அவர்கள் ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்களுக்கும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினர் மூலம் நோட்டீஸ் அனுப்பி அவைகளை அரசியல் ஆயுதங்களாக மாற்றுகின்றனர். பா.ஜ.க மற்றும் அதன் சிந்தாந்த வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ்ஸிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ராகுல் காந்தி நாட்டை ஒருங்கிணைக்க விரும்புகிறார். ஆனால், பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ்ஸும் வெறுப்பை மட்டுமே பரப்பி வருகின்றன.
இன்றும் மணிப்பூரில் மக்கள் கொல்லப்படுகிறார்கள். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். நூற்றுக்கணக்கான வீடுகள் எரிக்கப்படுகின்றன. மணிப்பூர் மற்றும் நாகலாந்துக்கு மோடி சென்று அங்குள்ள மக்களுடன் பேசி அமைதியை நிலைநாட்ட வேண்டும். அப்போது தான், அமைதியை நிலைநாட்டுவது எவ்வளவு கடினம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். குஜராத் மாநிலத்தில் மோடி முதலமைச்சராகி, இப்போது நாட்டுக்கு பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். காங்கிரஸ் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாத்ததால் தான் மோடி இப்போது பிரதமராக இருக்கிறார். ஆனால், இப்போது அதை முழுமையாக அழிக்க நினைக்கிறார்கள்” என்று பேசினார்.