மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் மார்ச் 27- ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, மேற்கு வங்க மாநிலத்தின் தற்போதைய முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வகையில் முதல்வர் மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதேபோல், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் மாநிலம் முழுவதும் வேட்பாளர்களை ஆதரித்து, தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் 'தீர்மானக் கடிதம்' என்ற பெயரில் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (21/03/2021) வெளியிட்டார். அந்த தேர்தல் அறிக்கையில், 'மாநில அரசுப் பணிகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு தரப்படும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டு அமல்படுத்தப்படும். மேற்கு வங்க மாநிலத்தில் அகதிகளாக உள்ள ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூபாய் 10,000 வழங்கப்படும். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் மேற்கு வங்கத்தில் 3 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும். மழலையர் கல்வி முதல் முதுநிலைப் படிப்பு வரை பெண்களுக்கு இலவசமாகக் கல்வி வழங்கப்படும்' உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளது.