கேரளாவில் இரண்டு தொலைக்காட்சி செய்தி சேனல்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை தற்போது விலக்கப்பட்டுள்ளது. தில்லியில் கடந்த மாதம் 25ம் தேதி நடைபெற்ற வன்முறை குறித்தான செய்திகளை ஒருசார்பாக ஒளிப்பரப்பியதாக கூறி மலையாள செய்தி தொலைக்காட்சிகளான ஏசியா நெட் மற்றும் மீடியா ஒன் சேனல்களின் ஒளிபரப்புக்கு இரண்டு நாட்கள் தடைவிதிப்பதாக மத்திய தகவல் ஒளிப்பரப்பு துறை நேற்று அறிவித்திருந்தது. அதன்படி வெள்ளி இரவு 7.30 மணியில் இருந்து அடுத்த 48 மணிநேரத்துக்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் இந்த இரண்டு தொலைக்காட்சிகளுக்கும் விதிக்கப்பட்ட தடை கருத்து சுகந்திரத்துக்கு எதிரானது என்று பல்வேறு தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனால் அந்த குறிப்பிட்ட செய்தி சேனல்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தொலைக்காட்சிகளின் சுதந்திரத்தில் தலையிட்டுள்ளதை அனைவரும் வெளிப்படையாக அறியலாம் என்று அம்மாநிலத்தை சேர்ந்தவர்கள் இணையதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.