திரிபுரா மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், தற்போதிலிருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனையொட்டி திரிபுரா சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் அடுத்தாண்டு ஜனவரி 1 ஆம் தேதி தயாராகும் எனத் தெரிவித்தார். மேலும், சுதந்திரம் அடைந்ததில் இருந்தே ராமர் கோயில் பிரச்சினை காங்கிரஸால் முடக்கப்பட்டு வந்த நிலையில், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "அனைவருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் திரிபுரா மாநிலத்திற்கு தேர்தல் வரும்போது ஏன் இந்த மாதிரியான அறிவிப்பை வெளியிடுகிறீர்கள், நீங்கள் ஒரு அரசியல்வாதி, பூசாரி அல்ல. கோயில் திறப்பு பற்றி பேச நீங்கள் யார்?. மகான்கள், சாதுக்கள் மற்றும் துறவிகள் இதைப் பற்றி பேசட்டும். நாட்டைப் பாதுகாப்பது உங்கள் கடமை, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவது உங்கள் கடமை. கோவில் பற்றிய அறிவிப்புகளை வெளியிடக்கூடாது" எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.