மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சாரங்களை தொடங்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக கட்சி 200 பொதுக்கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாகப் பிரதமர் மோடி கடந்த வாரம் துர்காபூரில் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். இதில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் கலந்துகொள்வதாக இருந்தது. இந்நிலையில் யோகியின் ஹெலிகாப்டர் தரையிறங்க மம்தா பானர்ஜி தடை விதித்தார். அதனை தொடர்ந்து காணொளி காட்சி மூலம் அந்த கூட்டத்தில் யோகி பங்கேற்றார். இந்நிலையில் இன்று மேற்குவங்கத்தில் நடைபெறும் பொது கூட்டத்தில் யோகி பங்கேற்கும் நிலையில் இன்றும் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து யோகி ஆதித்யநாத் ஜார்கண்ட் வரை ஹெலிகாப்டரில் வந்து, அதன் பின் காரில் பொது கூட்டம் நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். இதுகுறித்து யோகி ஆதித்யநாத் கூறுகையில், 'இது ஒரு பழிவாங்கல் நடவடிக்கை. மேலும் ஊழலில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி பாஜகவை பார்த்து பயப்படுவது இயல்பு தான்' என கூறினார். மேலும் மத பானர்ஜி இதுகுறித்து கூறுகையில், 'யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேச மாநிலத்தின் நிர்வாகத்தை கவனிக்க பாஜக தலைமை வலியுறுத்த வேண்டும். அவர் மாநிலத்தை சிறப்பாக நிர்வகித்து விட்டு அதன்பின் அவர் மேற்குவங்கத்துக்கு வரட்டும்' என கூறினார்.