இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக 19.04.2024 தொடங்கிய தேர்தலானது வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த மக்களவைத் தேர்தலில், ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக கடந்த ஆண்டு, காங்கிரஸ் தலைமையில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
எதிர்கட்சிகள் ஒன்றிணைந்த இந்தியா கூட்டணி சார்பாக, பீகார், பெங்களூர், மும்பை, டெல்லி என ஒவ்வொரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்குள், தொகுதி பங்கீட்டில் சில கருத்து மோதல்கள் இருந்தாலும், பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை கருத்தோடு செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில், சுரங்க முறைகேட்டின் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி, இந்தியா கூட்டணியில் இருக்கும் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதே போல், டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதற்கு, எதிர்கட்சிகள், பா.ஜ.க மீது குற்றச்சாட்டு வைத்தும், கடும் கண்டனமும் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவை அடுத்து, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை எதிர்கொள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிர வாக்குப்பதிவில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நேற்று (21-04-24) இந்தியா கூட்டணி சார்பில் பிரமாண்ட பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பா.ஜ.க தலைமையிலான ஒன்றிய அரசை கடுமையாக சாடினார். அதில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “ஹேமந்த் சோரன் இந்திய கூட்டணியில் இருந்து பிரிந்து செல்ல மறுத்ததற்காக சிறைக்கு அனுப்பப்பட்டார். ஹேமந்த் சோரன் ஒரு துணிச்சலான நபர், அவர் தலை குனிவதை விட சிறை செல்வதையே விரும்பினார்.
ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பாராளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி திரௌபதி முர்முவை அழைக்காமல், பிரதமர் நரேந்திர மோடி பழங்குடியினரை அவமதித்துவிட்டார். பழங்குடியினரை தொடர்ந்து பயமுறுத்தினால் பா.ஜ.க அழிந்துவிடும். பழங்குடியினரை தீண்டத்தகாதவர்களாக பா.ஜ.க கருதுகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 150 முதல் 180 இடங்களையே வெற்றி பெறும்” என்று கூறினார்.