ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. அதனால், இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்தியப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 உதவித்தொகை உள்ளிட்ட பல தேர்தல் வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த கெஜ்ரிவால் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம் பண்டேல்கண்ட் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், “மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். அதை தொடர்ந்து, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்தபட்சமாக ரூ.500 க்கு விற்பனை செய்யப்படும். பெண்களுக்கு மாத ஊதியமாக ரூ.1500 வழங்கப்படும். அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்” எனப் பல வாக்குறுதிகளை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து பேசிய மல்லிகார்ஜூன கார்கே, “ஒரு சிலர் அரசியல் அமைப்பை மாற்ற முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், நாட்டில் உள்ள 140 கோடி மக்கள் அம்பேத்கர் இயற்றிய அரசியல் அமைப்பிற்கு பாதுகாப்பாக இருக்கின்றனர். அதனால், அது எப்போதும் சாத்தியமில்லை. மத்திய பிரதேசத்தில் அமைந்திருக்கும் ஆட்சியே சட்டவிரோதமான அரசு தான். தேர்தல் முடிந்த பின் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களை அவர்கள் பக்கம் இழுத்து ஆட்சியை நடத்தினார்கள். 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்று அடிக்கடி கேட்கிறார்கள். இத்தனை ஆண்டு கால ஆட்சியில் அரசியல் சாசனத்தை நாங்கள் காப்பாற்றினோம். ஆனால், அவர்கள் அமலாக்கத்துறை மூலம் அரசாங்கத்தை நடத்துகிறார்கள். கர்நாடகா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களை போன்று அவர்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் கலவரத்தை ஏற்படுத்துவார்கள்.
சாகர் மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்பில் சமூக சீர்திருத்தவாதியான சாந்த் ரவிதாஸின் நினைவிடத்தை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அடிக்கல் நாட்டினார். நரேந்திர மோடி கடந்த ஒன்பது ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கிறார். அதே போல், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கடந்த 18 ஆண்டுகளாக ஆட்சி செய்கிறார். ஆனால், இவர்கள் தேர்தல் நேரத்தில் தான் சாந்த் ரவிதாஸை நினைவு கூர்வார்கள். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் சாகர் மாவட்டத்தில் சாந்த் ரவிதாஸ் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். அதைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தில் ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.