இந்தாண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று உரையாற்றினார். பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது நாளின் போது மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நேற்று (03-02-25) முதல் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மாநிலங்களவை உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவையில் பேசினார்.
அப்போது அவர், “2013 ஆம் ஆண்டு, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, டாலரின் மதிப்பு ரூ.60 ஆக இருந்தபோது, ரூபாய் மதிப்பு ஐசியுவில் இருந்ததாகக் கூறினார். இப்போது, டாலர் மதிப்பு ரூ.87 ஐத் தாண்டியுள்ளது” என்று பேசினார். அப்போது முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நீரஜ் சேகர் குறுக்கிட்டார். இதில் கோபமடைந்த மல்லிகார்ஜுன கார்கே, “உங்கள் அப்பாவும் என்னுடன் இங்கே இருந்தார். நீங்கள் என்ன பேசுகிறீர்கள்? உட்காருங்கள்” என்று பேசினார்.
இந்த விவாதம் சபை உறுப்பினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் சபை தலைவர் ஜக்தீப் தன்கர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வலியுறுத்தினார். நீரஜ் சேகரை நோக்கி, கார்கேவில் இந்த திடீர் பதில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பா.ஜ.க உறுப்பினர்களிடமிருந்து கடுமையான எதிர்வினைகளைப் பெற்றுள்ளது.