உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. மொத்தமுள்ள 3,050 கிராம பஞ்சாயத்து இடங்களில் சமாஜ்வாடி கட்சி 760 இடங்களில் வெற்றி அல்லது முன்னிலை பெற்றுள்ளது. மாநிலத்தின் ஆளுங்கட்சியான பாஜகவோ 719 இடங்களில் வெற்றி அல்லது முன்னிலை பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 381 இடங்களிலும், காங்கிரஸ் 76 இடங்களிலும் வெற்றி அல்லது முன்னிலை பெற்றுள்ளன. 1,114 இடங்களில் சுயேச்சைகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
இந்தக் கிராம பஞ்சாயத்து தேர்தலில், அயோத்தி, பிரதமர் மோடி தொகுதியான வாரணாசி ஆகிய இடங்களில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. வாரணாசியில், மொத்தமுள்ள 40 பஞ்சாயத்து இடங்களில் 8 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. சமாஜ்வாடி கட்சி 14 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி ஐந்து இடங்களைப் பிடித்துள்ளது.
அதேபோல் அயோத்தியில் உள்ள 40 இடங்களில் பாஜக வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. சமாஜ்வாடி கட்சி 24 இடங்களைப் பிடித்துள்ளது. பகுஜன் சமாஜ் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளது. அதேபோல் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவிலும் பாஜக சரிவை சந்தித்துள்ளது. மொத்தமுள்ள 25 இடங்களில் பாஜக 6 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. சமாஜ்வாடி அங்கு 10 இடங்களைப் பிடித்துள்ளது.
கிராம பஞ்சாயத்து தேர்தலில், பாஜகவின் பின்னடைவுக்கு வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டமும், அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலையும் முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. மேலும் அடுத்தாண்டு உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்த தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.