இந்திய நாட்டின் 73- வது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26- ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் டெல்லியில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அத்துடன், டெல்லி காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
குடியரசு தின விழாவில் நாட்டின் வலிமையைப் பறைசாற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவை அணிவகுப்பில் இடம் பெறும். அத்துடன், ஒவ்வொரு மாநிலங்களின் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் ஊர்திகளும் அணிவகுப்பில் இடம்பெறும். இந்த ஊர்திகள் அனைத்தும் டெல்லி ராஜபாதையில் அணி வகுத்து செல்லும்.
அந்த வகையில், வரும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் அலங்கார ஊர்திகள் குறித்து முழுமையாகப் பார்ப்போம். இந்தாண்டு அணிவகுப்பில் மொத்தம் 25 அலங்கார ஊர்திகள் இடம்பெறுகின்றன. இதில் மத்திய அரசின் முக்கிய துறைகளைச் சார்ந்த 13 அலங்கார ஊர்திகளும், 12 மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகள் இடம் பெறுகின்றன.
அருணாச்சலப்பிரதேசம், கர்நாடகா, கோவா, உத்தரகாண்ட், ஹரியானா, சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, மேகாலயா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் டெல்லி அணி வகுப்பில் கலந்துக் கொள்கின்றனர்.
உத்தராகண்ட் மாநிலத்தின் அலங்கார ஊர்தியில் பத்ரிநாத் கோயில் வடிவம், அழகான மலர்களின் தோற்றம் இடம்பெற்றுள்ளது. அதேபோல், குஜராத் மாநிலத்தின் அலங்கார ஊர்தி ஜாலியன் வாலாபாக் படுகொலையை உணர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹரியானா அலங்கார ஊர்தியில் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட உருவங்களும், உத்தரப்பிரதேச ஊர்தியில் வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தின் உருவமும், கர்நாடகா ஊர்தியில் அனுமன் சிலையும் இடம்பெற்றுள்ளது.