
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த கனரக வாகனங்களை டெல்லி நகருக்குள் இயக்க தடை விதிக்க வேண்டும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்தது. அதன்படி டெல்லிக்குள் கனரக வாகனங்கள் நுழைவதற்கு நேற்றிரவு 11 முதல் மூன்று நாட்கள் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசுவின் அளவு உச்சகட்டத்தை அளவை எட்டியுள்ளது. வாகன புகையினாலும் காற்றின் தரம் குறைந்து வருகிறது. தீபாவளிக்குப் பின் இது மேலும் மோசமடைந்து காற்று மாசு படிப்படியாக உயர்ந்து அபாய அளவை தாண்டியுள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு 11 மணி முதல் டேங்கர் லாரிகள், சரக்கு லாரிகள் போன்ற கனரக வாகனங்களை டெல்லிக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்படுகின்றன. தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்கள் வேறு பாதையில் திருப்பி அனுப்பபடுகின்றன. அத்தியாவசிய பொருட்களை கொண்டுவரும் கனரக வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என்று டெல்லி போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இந்த காற்று மாசுவை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகள் கொண்டுவந்தது. அதில் வீடுகளில் தெய்வ வழிபாடின் போது கொளுத்தப்படும் ஊதுபத்தியை கூட நிறுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்போதும் காற்று மாசு குறைந்தபாடில்லை என்பதால் மூன்று நாட்களுக்கு கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.