தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வரும் சிவசேனா கட்சி, சமீப காலங்களில் பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்து வந்தது. மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலை தனியாக சந்திப்போம் என்று தெரிவித்து வந்தது சிவசேனா. இந்நிலையில் தற்போது திடீரென பாஜகவுடனான கூட்டணியை உறுதி செய்துள்ளது சிவசேனா. மேலும் இன்று மாலைக்குள் இரு கட்சிகள் மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலில் தாங்கள் போட்டியிடும் இடங்கள் எவை என்பது குறித்து அறிவிக்க உள்ளன. இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், “இன்று மாலை அமித் ஷா, உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேச உள்ளார். அப்போது தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து அறிவிக்கப்படும் " என கூறினார். மொத்தம் 48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில், பாஜக 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.