நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று (09.06.2024) நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்களும், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள் பதவியேற்றனர். இதன் மூலம் பிரதமர் மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அதில் 30 கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள் மற்றும் 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதனையடுத்து மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சி.ஆர்.பாட்டீல் - ஜல் சக்தி (நீர்வளம்) கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வி.சோமண்ணா - ஜல்சக்தி (நீர்வளம்) இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சோமநாத்துக்கு மத்திய இணை அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி நதி நீர் பிரச்சனை நீடித்து வரும் நிலையில் சோமநாத்துக்கு நீர்வளத் துறை ஒதுக்கியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மேகதாது விவகாரத்திலும் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், எதிர்கட்சியான பாஜகவும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவைச் சேர்ந்தவருக்கு நீர்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள், தமிழக விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.