உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ரூ. 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம்(22.1.2024) ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். அதன் பிறகு, கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நேற்று முன்தினம் (22-01-24) ராமர் பக்தர்கள் ஆங்காங்கே ஊர்வலம் நடத்தினர். அந்த வகையில், மும்பை அருகில் உள்ள மீரா ரோடு பகுதியில் இருக்கும் நயா நகரில், இந்து அமைப்பினர் ஊர்வலம் நடத்தினர். அப்போது, ஒரு கும்பல் பைக் மற்றும் காரில் காவி கொடியுடன் ஊர்வலம் நடத்தியவர்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், வாகனங்கள் சேதம் அடைந்து சிலர் காயம் அடைந்தனர். வாகன உரிமையாளர்கள் உள்ளிட்டோர் எதிர்த் தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு வன்முறை ஏற்பட்டது.
இதையடுத்து, நயா நகரில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், அந்த பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு கலவரக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எச்சரித்தார். இரு தரப்பினர் மோதிக் கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இந்த கல்வீச்சு தாக்குதல் சம்பவத்திற்கு முக்கிய காரணம் நயா நகரின் ஆக்கிரமிப்பு இடங்களில் வசித்து வருபவர்கள்தான் என அரசு சார்பில் சட்ட விரோதமான 15 இடங்களை இடித்துத் தள்ள முடிவு செய்தது. இதனால், அந்த பகுதிக்கு புல்டோசர் கொண்டு வரப்பட்டு, சட்டவிரோத இடங்களில் கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்கும் பணி தொடங்கியது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் இடித்துத் தள்ளப்பட்டன. உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்முறையாக முதல்வர் யோகி ஆதித்யநாத், குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக புல்டோசர் மூலம் இடங்களை இடித்து நடவடிக்கை எடுத்தார். இந்த நிலையில், மகாராஷ்டிராவிலும் இந்த புல்டோசர் நடவடிக்கை தொடர்ந்துள்ளது.