தமிழக சட்டப்பேரவையில் இரண்டாம் முறையாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இதற்கு முன்பே தமிழக அரசிற்கும் ஆளுநருக்கு இடையே பல்வேறு முரண்கள் ஏற்பட்டு பரபரப்பு நிகழ்வுகள் ஏற்பட்டிருந்தன.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலநிர்ணயம் வேண்டும் என ஒவ்வொரு மாநில சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், 'நமது நாட்டில் கூட்டாட்சி தத்துவம் படிப்படியாக மறைந்து வருவதை காண்கிறோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் ஆளுநருடைய கடமைகள் குறித்தும், ஒன்றிய-மாநில அரசுகளின் கடமைகளும் பொறுப்புகளும் வரையறுக்கப்பட்டுள்ள போதிலும் அவை மதிக்கப்படுவதில்லை. இதனால் மாநில அரசின் செயல்பாடுகள் பெரும் பாதிப்படைகிறது. மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்படும் பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் மாநில ஆளுநர்கள் காலவரையறை இன்றி நிலுவையில் வைத்திருக்கின்றனர். இதனால் அந்தந்த மாநில செயல்பாடுகள் குறிப்பிட்ட இடங்களில் முடங்கிப் போய் இருக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உட்பட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மறுத்தார் ஆளுநர். அவர் எழுப்பி சந்தேகங்களுக்கு பலமுறை பதில் சொல்லி தெளிவுபடுத்தியும் முயற்சிகள் பயனளிக்கவில்லை. இதே நிலைதான் பல்வேறு மாநிலங்களிலும் நடைபெறுகிறது. எனவே அந்தந்த மாநிலங்களில் சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு காலநிர்ணயம் செய்ய வேண்டும் என ஒன்றிய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியுறுத்தி தீர்மானம் ஏற்றுவது ஏற்புடையதாக இருக்கும்' எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.