மருத்துவக் கல்லூரி ஒன்றில் ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்களை, மாறுவேடத்தில் சென்று கண்டுபிடித்த போலீசாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் செயல்பட்டு வரும் மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரியில் ராகிங் நடப்பதாக பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவி எண்ணுக்குப் புகார் ஒன்று வந்துள்ளது. இது தொடர்பாகக் கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்த போலீசாருக்கு வழக்குத் தொடர்பாக விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
ராகிங் நடப்பதாக மட்டுமே தெரிந்திருந்த நிலையில், ராகிங்கில் ஈடுபட்டவர்கள் யார், எத்தனை பேர் இதில் சம்பந்தப்பட்டு உள்ளனர் என்ற விவரம் ஏதும் போலீசாருக்குக் கிடைக்கவில்லை. இதனால் மாற்று வழியை யோசித்த போலீசார், தாங்களே மருத்துவக் கல்லூரிக்கு மாறுவேடத்தில் சென்று உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடிவு செய்தனர். இதனையடுத்து 24 வயதான பெண் காவலர் ஷாலினி சவுகான் மருத்துவக் கல்லூரி மாணவி வேடத்தில் மருத்துவக் கல்லூரிக்குச் சென்றார். மேலும், ஒரு பெண் காவலர் செவிலியர் வேடத்திலும் இரண்டு ஆண் தலைமைக் காவலர்கள் உணவக ஊழியர்களாகவும் சென்று அங்குள்ள மாணவர்களிடம் நெருங்கிப் பழகி உள்ளனர்.
மேலும், இவர்கள் தொடர்ந்து மாணவர்களிடம் பழகி வந்ததில் ராகிங் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. ராகிங்கில் ஈடுபட்டவர்களைக் காவலர்கள் அடையாளம் கண்டு அவர்கள் பற்றிய தகவல்களைத் தொடர்ந்து சேகரித்து வந்தனர். இதன் மூலம் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்ததோடு மட்டுமின்றி, வழக்குத் தொடர்பான அனைத்து விபரங்களும் தற்போது காவல்துறையினர் வசம் கிடைத்துள்ளன. இந்தத் தகவல்களை வைத்து ராகிங் சம்பவத்தில் தொடர்புடைய 11 பேரைக் காவல்துறையினர் கண்டறிந்து உள்ளனர். மருத்துவக் கல்லூரி சார்பில் அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். தற்போது 11 பேரையும் மூன்று மாதங்களுக்குக் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உள்ளனர்.