
மொத்தம் 294 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏற்கனவே மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 44 சட்டமன்றத் தொகுதிகளுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு நேற்று (10/04/2021) நடைபெற்றது. நான்காம் கட்டத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், பா.ஜ.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் உள்பட 373 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஐந்து மாவட்டங்களில் உள்ள 44 சட்டமன்றத் தொகுதிகளும் பதற்றமானவை என்பதால் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கூச் பெஹார் மாவட்டத்தில் பா.ஜ.க., திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. மோதலைக் கட்டுப்படுத்த மத்திய பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையம், "வாக்காளர்கள், தேர்தல் அலுவலர்களைக் காக்கவே மேற்கு வங்கத்தின் கூச் பெஹார் பகுதியில் மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது. துப்பாக்கிச் சூடு நடைபெற்ற கூச் பெஹார் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 72 மணி நேரத்திற்கு அரசியல் கட்சியினர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும் நேற்று (10/04/2021) மாலை 06.30 மணி நிலவரப்படி, 76.16% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.